பில் கேட்ஸும் நம்ப ஜோன்ஸும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.முடித்துவிட்டு பில்லுக்குப் பணம் ஜோன்ஸ் கொடுக்க, முகம் மலர்ந்தார் ஹோட்டல் முதலாளி. "ஜோன்ஸ் உங்களைப் பாத்து எத்தனை நாளாச்சு.. நல்லாருக்கீங்களா.." என விசாரித்தார். மற்ற பணியாளர்களும் வந்து நலம் விசாரிக்க, ஆச்சரியத்துடன் பார்த்த பில்கேட்ஸ் "ஜோன்ஸ் உங்களுக்குப் பல பேரைத் தெரியும் போலிருக்கே" என்றார்.
"நான் உலகத்திலேயே பிரபலமான மனிதன்"என்றார் ஜோன்ஸ். மேலும், "ஆயிரம் டாலர் பந்தயம் கட்டறேன். நீங்க யார்கிட்டே வேணும்னாலும் என்னக் கூட்டிக்கிட்டுப் போங்க. அவங்களுக்கு என்னத் தெரிஞ்சிருக்கும்" என சவால் விட, பில் கேட்ஸும் சவாலை ஏற்றுக்கொண்டார்.
இருவரும் அமெரிக்க ஜனாதிபதியைப் பார்க்கச் செல்ல, ஜனாதிபதி ஜோன்ஸைக் கட்டியணைத்துக் கொண்டு "நல்லாருக்கியா ஜோன்ஸ்?" என குசலம் விசாரித்தார்.
ஆச்சரியமான பில் கேட்ஸ், "ஓகே. இது உங்களுடைய அதிர்ஷ்டமாக இருக்கலாம். வாங்க... பிரிட்டிஷ் அரசி கிட்டப் போவோம்"
இருவரும் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்ல, வாசலில் நின்று கொண்டு வரவேற்றார் அரசி. "வாங்க ஜோன்ஸ்.. நல்ல சுகமா, பிரயாணம் எப்படி இருந்தது?"
அதிர்ந்து போன பில் கேட்ஸ், "ஜோன்ஸ்.. இது ஆச்சரியமான விஷயம்தான்.
இறுதியாக போப்பாண்டவர்கிட்ட போகலாம்" ஜோன்ஸும், பில் கேட்ஸும் வாடிகன் சென்றனர். போப்பாண்டவர் மாளிகை உச்சியில் இருந்து கொண்டு கீழிருந்த மக்கள் கூட்டத்திற்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் நின்றிருந்த ஜோன்ஸ் பில் கேட்ஸிடம், "நான் இப்போது மேலே சென்று போப்பிடம் பேசுகிறேன், நீங்கள் இங்கிருந்தே பாருங்கள்" என்று கூறிவிட்டு மேலே சென்றார்.
'ஆ'வென வாய் பிளந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த பில்கேட்ஸிடம் பக்கத்தில் நின்றிருந்த ஒருவன் எதையோ கூற மயங்கி விழுந்தார் பில் கேட்ஸ். ஜோன்ஸ் மேலிருந்த பதட்டத்துடன் கீழே வந்தார். "என்னாச்சு பில்?" என அவரை எழுப்ப, மயக்கம் தெளிந்தபடி "உண்மையிலே நீங்கள்தான் உலகின் பிரபலம்நம்பர் 1" என்றார் கேட்ஸ்.
பெருமையுடன் சிரித்த ஜோன்ஸிடம் "நான் மயங்கி விழுந்ததுக்குக் காரணம் கேட்கலியே" என்ற பில், "என் பக்கத்தில் நின்றிருந்த ஒருவன் கேட்டானே ஒரு கேள்வி, மேலே ஜோன்ஸ் நிற்கிறார்.. தெரிகிறது, அதென்ன பக்கத்தில் வெள்ளை அங்கியுடன் ஒருவர். அவர் யாரென்று தெரிந்தால் சொல்லுங்களேன். அப்படினு கேட்டுப்புட்டான்" என்ற பில் மீண்டும் மயங்கி விழுந்தார்.